×

வருகை பகுதியில் இருந்து வெளியே செல்லாமல் புறப்பாடு பகுதிக்கு செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்தில் ‘டிரான்சிட்’ பயணிகளுக்கு புதிய வசதி

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பயணிகள், ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய வெளியே வந்து விட்டு பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்றுதான் பயணிக்க வேண்டும். மிக முக்கிய விவிஐபி பயணிகள் தவிர, மற்ற சாதாரண பயணிகள் அனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது. இதனால் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. பல நேரங்களில் பயணிகள், விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இத்தகைய டிரான்சிட் பயணிகள் தரப்பில், வெளியில் செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது உள்நாட்டு விமான நிலையத்தில், டிரான்சிட் பயணிகள் வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து நேரடியாக புறப்பாடு பகுதியின் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியால் டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணிக்க முடியும். இந்த வசதி உள்நாட்டு விமான பயணிகளில் டிரான்சிட் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. புறப்பாடு விமானத்தை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சம் இனி இருக்காது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

The post வருகை பகுதியில் இருந்து வெளியே செல்லாமல் புறப்பாடு பகுதிக்கு செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்தில் ‘டிரான்சிட்’ பயணிகளுக்கு புதிய வசதி appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai Domestic Airport ,Dinakaraan ,
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...